×

அரிசி கொம்பன் யானை பிடிப்பட்டதையடுத்து சுருளி அருவியில் 10 நாட்களுக்கு பின் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி

தேனி: தேனி கம்பம் அருகே சுருளி அருவியில் 10 நாட்களுக்கு பின் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வனத்துறை தெரிவித்துள்ளது. சண்முகா அணைப்பகுதியில் சுற்றித் திரிந்த அரிசிக்கொம்பன் யானை பிடிக்கப்பட்ட நிலையில் தடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், மூணாறு அருகே சின்னக்கானல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அரிசிக்கொம்பன் காட்டுயானை அட்டகாசம் செய்து வந்தது. இந்த யானையை கடந்த ஏப். 30ம் தேதி வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்து, பெரியாறு புலிகள் சரணாலய வனப்பகுதிக்குள் விட்டனர்.

ஆனால், அரிசிக்கொம்பன் யானை, மாவடி வனப்பகுதிக்கு மேல் உள்ள மேதகானமெட்டு வனப்பகுதி வழியாக தமிழக வனப்பகுதியான மேகமலை மற்றும் குமுளி ரோஜாப்பூ கண்டம் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிக்கு சென்றது. இதனை தொடர்ந்து தேனி மாவட்டம், கம்பம் நகருக்குள் புகுந்த அரிசிக்கொம்பன் யானை தெருக்கள், சாலைகளில் சென்றவர்களை விரட்டியது.

இதையொட்டி கம்பம், கே.கே.பட்டி, சுருளிப்பட்டி, சண்முகா அணைப்பகுதி உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் வெளிநபர்கள் கம்பம் நகருக்குள் நுழையவும் தடை விதிக்கப்பட்டது. யானையின் நடமாட்டம் குறித்து 12 வனத்துறை குழுவினரால் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்தது.

மேலும் யானையை பிடிக்க 3 கும்கி யானைகளுடன் வனத்துறையினருடன் கம்பம் பகுதியில் முகாமிட்டு இருந்தனர். இந்த நிலையில் சண்முகா அணைப்பகுதியில் சுற்றித்திரிந்த அரிசி கொம்பனை கும்கி யானைகளின் உதவியுடன் வனத்துறையினர் சுற்றி வளைத்தனர். பின்னர் கொம்பனுக்கு 2 மயக்க ஊசிகள் அடுத்தடுத்து செலுத்தப்பட்டது. இதில் நிலை குலைந்த அந்த யானை மயங்கி விழுந்தது. இதையடுத்து அரிசிக்கொம்பன் யானை களக்காடு முத்துக்குளி காட்டில் விடப்பட்டது.

இதனிடையே அரிசி கொம்பன் யானை பிடிப்பட்டத்தை அடுத்து கம்பம், கே.கே.பட்டி, சுருளிப்பட்டி, சண்முகா அணைப்பகுதி பகுதியில் விதிக்கப்பட்ட 144 தடை உத்தரவு வாபஸ் பெறப்பட்டது. இதனையடுத்து சுருளி அருவியில் 10 நாட்களுக்கு பின் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

The post அரிசி கொம்பன் யானை பிடிப்பட்டதையடுத்து சுருளி அருவியில் 10 நாட்களுக்கு பின் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி appeared first on Dinakaran.

Tags : Suruli Falls ,Theni ,Theni Gampam ,Forest Department ,
× RELATED தேனியில் இலவச மருத்துவ முகாம்